அதிபரின் ஆசிச் செய்தி
'எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்'
என்ற தெய்வப் புலவர் வள்ளுவர் வாக்குக்கமைய, துன்பங்களை முன்னரே அறிந்து அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்பவன் இவ்வுலகில் சாதனை படைக்கிறான், அவனே மனிதருள் மாணிக்கமாகத் திகழ்கிறான். அவனுக்கு இறப்பு இல்லை, அவன் எந்நாளும் இவ்வுலகில் வாழ்கிறான்.
திருவள்ளுவர், புத்தபெருமான், இயேசுநாதர், முகம்மது நபி போன்றோரின் புலாலுடம்பு அழிந்தாலும் அவர்தம் புகழுடம்பு அழியவில்லை. இவர்கள் உலகில் வாழ்ந்து காட்டியவர்கள், எமக்கு வாழக் கற்றுக்கொடுத்தவர்கள்.
தற்காலத்தில் 'பாடசாலைகள்' என்ற கல்விக் கூடங்களுக்கு எத்தனையோ சவால்கள், எத்தனையோ பிரச்சனைகள். ஆனாலும் அவை அனைத்தையும் வென்று தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றன. இதற்கு என்ன காரணம் எனச் சிந்திப்போமாயின், அவை வெறுமனே கல்வியை மாத்திரம் வழங்குவதில்லை, கல்வியோடு சமூகத்தில் வாழும் வழிகளும் அங்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றன - கட்டாயம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை நிலைத்து வளரும். அதன்மூலமே சமூகத்தில் நின்று நிலைத்த அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.
பாடசாலைகளின் அபிவிருத்தி, அப்பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், ஆட்சியாளர்கள், நலன்விரும்பிகள் போன்றோரின் ஆசீர்வாத்திலும் அயராத உழைப்பிலுமே தங்கியுள்ளது. அவர்கள் மனதுவைத்தால் மூடப்படும் கல்விநிலையங்களைத் திறக்க முடியும். திறக்கப்படும் நீதிமன்றங்களையும் சிறைச்சாலைகளையும் மூடமுடியும்.
எமது பாடசாலையைப் பொறுத்தவரை வெற்றிகள் பல கண்டு அபிவிருத்தியடைந்து வந்தாலும் இன்னும் எவ்வளவோ விடயங்களில் முன்னேற இடடமுள்ளது, தேவையும் உள்ளது. அத் தேவைகளைப் பூர்த்திசெய்ய எமது பெற்றோர்களால் மட்டும் முடியாது. அவர்கள் சமூக, பொருளாதாரக் குறிகாட்டிகளில் அபிவிருத்தியடையப்படவேண்டியவர்கள்.
அதனால் பழைய மாணவர்களே இப் பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவவேண்டியவர்கள். இவர்கள் மனது வைத்தால் பாடசாலை பல துறைகளிலும் அபிவிருத்தியடைய வாய்ப்புண்டு.
எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இணையதளமானது, பாடசாலையினதும், சமூகத்தினதும், பிரதேச மக்களினதும் வளர்ச்சிக்குத் துணைபுரிவதோடு, அதன் புதிய அணுகுமுறைகள் மூலம் எமது பிரதேச மக்கள் உலகளாவிய ரீதியில் புதுமைகள் பல படைக்கக்கூடியவர்களாக மிளிரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
'துன்ப முறவரினுஞ் செய்க துணிவொற்றி
இன்பம் பயக்கும் வாளன.'
நன்றி.